Powered By Blogger

Thursday, September 23, 2010

உணவு நெருக்கடி என்பது உணவுப் பற்றாக்குறை அல்ல!

உணவு நெருக்கடி என்பது இன்னும் தீரவில்லை. அதைப்பற்றிப் பேசுவதும், சிந்திப்பதும் ஒதுக்கப்பட்டுள்ளது அல்லது மறக்கடிக்கப்பட்டுவிட்டது. பணம் உள்ளவர்கள் நன்றாக, செறிவாக உண்கிறார்கள். ஏழைகள் ஒன்று கிடைத்ததை உண்கிறார்கள் அல்லது பட்டினி கிடக்கிறார்கள்.

வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளில் உணவுப் பொருட்களை வாங்குவதற்குப் பலர் செலவு செய்ய முடிவதில்லை. பசி தொடர்கிறது.

பொதுவாக வறுமை எதனால் ஏற்படுகிறது என்பதற்கு கீழ் வரும் காரணங்கள் கூறப்படுகிறது:

கடுமையான இயற்கைப் பேரழிவ

அரசின் பல்வேறு பொருளாதாரககொள்கைகளிலபாகுபாடமற்றும் சார்புநிலை வாதம

போர

மோசமான உள்கட்டமைப்பும், பொருளாதாரமும், லஞ்சமும், ஊழலும

இன்னபிற...

ஆனால் இதற்கெல்லாம் இன்று வைக்கப்படும் தீர்வு என்ன தெரியுமா?

"உயர் தொழில்நுட்ப வேளாண்மை"

இந்த பிரச்சாரத்தில்தான் கார்ப்பரேட் ஊடகங்கள் ஈடுபட்டு வருகின்றன. தீர்வு என்று அவர்கள் கருதும் "உயர் தொழில்நுட்ப வேளாண்மை" சில பல மேற்கத்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதிப் பெருக்கத்திற்கும் ஏழை நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளின் 'நிதிப் பெருக்கத்திற்கும்' மட்டுமே இட்டுச் சென்றிருக்கிறது என்பது வரலாற்று உண்மை.

இந்தியாவில் 'பசுமைப் புரட்சி' செய்த 'மிகப்பெரிய விதைக்கொள்ளை' (The Great Grain Robbery) -பற்றியெல்லாம் நாம் கேள்விப்படாதது ஒன்றும் இல்லை. ஆனால் இதனை நாம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு உலக கார்ப்பரேட் ஊடகங்கள் உயர் தொழில்நுட்ப வேளாண்மை என்ற மாயையை உலகம் முழுதும் பரப்பி வருகின்றன.

உணவு நெருக்கடிக்கும், வறுமைக்கும் காரணங்கள் பலவிருக்க, மான்சாண்ட்டோ உள்ளிட்ட பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுக்கும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள், நச்சு ரசாயனப் பொதிகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விலங்குகள் ஆகியவை வறுமையைப் போக்கி ஏழைகளை வாழவைக்கும் என்று கார்ப்பரேட் விஞ்ஞானமும், அதனிடம் கையேந்தி நிற்கும் ஊடகங்களும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் திட்டமிட்ட பொய்யைப் பரப்பி வருகின்றனர்.

அதாவது தேசிய வேளாண் சந்தைகளை சர்வதேச சக்திகளுக்குத் திறந்து விடுவதுதான் நீண்டகால பொருளாதாரப் பயன்களை அளிக்கும் என்றும், தாரள மய வாணிபத்தில்தான் ஏழை நாடுகள் வளர்ச்சியடைய முடியும் என்ற பிரச்சாரம் அரசு எந்திரங்கள் முதல் ஊடகங்கள் வரை செய்து வருகின்றன.

இதற்குச் சிறந்த ஆதாரமாக நாம் ஒன்றை எடுத்துக்காட்டினால் அதிர்ச்சி ஏற்படும்:

"வளர்ச்சிகான வேளாண் அறிவு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பன்னாட்டு மதிப்பீடு" (The International Assessment of Agricultural knowledge, Science and Technology for Development - IAASTD) என்ற அமைப்பு உலகம் முழுதும் 400 நிபுணர்களை பாரபட்சமின்றித் தேர்வு செய்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு தரப்பட்ட வேளாண் விவகாரங்களும் அலசப்பட்டுள்ளன. அந்த அறிக்கை சுமார் 600 பக்கங்களுக்கும் அதிகமானது.

இதில் கூறப்பட்டுள்ள நியாயமான கருத்துக்களை அமெரிக்கா, கனடா உள்ளிட்ட சில பணக்கார நாடுகளும், பசுமைப் புரட்சி பிரச்சாகர்களும் இருட்டடிப்பு செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ள வாசகம்: "There is growing concern that opening national agricultural markets to international competition before basic institution and infrastructures are in place can undermine the agricultural sector, with long term negative effects for poverty, food security and the environment."
இதன் தமிழாக்கம் வருமாறு:

"அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படுவதற்கு முன்னர் தேசிய வேளாண் சந்தைகளை சர்வதேசப் போட்டிக்குத் திறந்து விடுவது, வேளாண் துறையை அழிப்ப்தோடு வறுமை, உணவுப்பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றில் எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தும் என்ற அச்சம் வளர்ந்து வருகிறது"

இதனை அமெரிக்கா கீழ்வருமாறு மாற்ற வலியுறுத்தியது:
"Opening natioanal agriculture markets to international competition can offer economic benefits, but can lead to long-term negative effects on poverty alleviation, food security and the environment without basic national institution and infrastructure being in place"

இதன் தமிழாக்கம் வருமாறு: "தேசிய வேளாண் சந்தைகளை சர்வதேச சந்தைகளுக்கு திறந்து விடுவதால் பொருளாதாரப் பயன்கள் உண்டு, ஆனால் அடிப்படையான தேசிய நிறுவனம் மற்றும் உள்கட்டமைப்பு இல்லாதபட்சத்தில் வறுமை ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் இது நீண்டகால எதிர்மறை விளவுகளுக்கு இட்டுச் செல்லும்"

பொருளாதாரப் பயன்கள் உண்டு என்பது அமெரிக்கா சேர்க்க வலியுறுத்திய சொற்றொடர். மூல வாக்கியத்தில் இல்லை. மேலும் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு என்றுதான் இருக்கிறதே தவிர அடிப்படை தேசிய நிறுவனம் என்று மூலத்தில் இல்லை. தேசிய என்று சேர்ப்பதன் மூலம் சுரண்டப்படும் நாடுகளுக்கே எதிர்மறை விளைவுகளிலிருந்து வெளிவரும் பொறுப்பு உள்ளது என்ற பொருள் ஏற்படுகிறது. அதாவது சுரண்டுவது நான், ஆனால் அதிலிருந்து வெளியே வர வேண்டியது உன்பாடு. பொருளாதார மோசடியோடு, மொழி மோசடியும் செய்வதைப் பாருங்கள். இதைவிட முக்கியமானது undermine the agricultural sector என்று மூலத்தில் உள்ளது. அமெரிக்கா பரிந்துரை செய்த வாசகத்தில் இது திட்டமிட்டு காணாமல் அடிக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு ஆட்படுவது ஏழைநாடுகளின் உழைக்கும் மக்கள் மட்டுமல்ல, மொழியும்தான்.
எதை எப்படிக் கூறவேண்டும் என்ற அதிகாரத்தையே பணக்கார நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். உண்மையை மறைத்து இவர்கள் உருவாக்கிய உண்மைபோல்களை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறது அதிகாரம்! இவர்களின் நச்சு உற்பத்திகளையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், மொழியை நச்சுமயமாக்கிச் செய்யும் வாசக உற்பத்திகளையும் நாம் ஏற்கவேண்டும்! எப்படியிருக்கிறது கதை!

மற்றொரு மோசடி வலியுறுத்தலைப் பார்ப்போம்: 'compensating revenues lost as a result of tarrif reductions is essential to advancing development agendas.'
இதனை அமெரிக்காவும், கனடாவும் : 'provision of assistance to help low income countries affected by liberalization to adjust and benefit from liberalized trade is essential to advancing development agendas' என்று மாற்றுமாறு பரிந்துரை செய்துள்ளது.
"தாராளமயத்தால் பாதிக்கப்பட்வருவாய் இழப்பு ஏற்படும் நாடுகளுக்கு உதவி அளிப்பது என்பது தாராளமயத்தால் ஏற்பட்ட விளைவுகளுக்குத் தங்களை தகவமைத்துக் கொள்வதும் தாராளமய வாணிபத்தால் பயனடைவதும் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியம்".

இவ்வாறு மாற்ற வலியுறுத்தியுள்ளது, அந்த அமைப்பின் அறிக்கைக்கும், இவர்கள் மாற்றச்சொல்லி பரிந்துரை செய்த வாசகங்களுக்கும் உள்ள மலைக்கும் மடுவுக்குமான வேறுபாட்டைக் கவனியுங்கள்!

ஏனெனில் அந்த அமைப்பு வறுமையை ஒழிக்கப் பரிந்துரை செய்த விஷயங்கள் உள்ளூர், மரபு வழி விவசாயம், விவசாயிகளின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாய உற்பத்தி, உயிர்ப் பரவலை சாகடிக்காத வேளாண்மை ஆகியவையே.

மரபணு மாற்றம் செய்த விதைகள், வீரிய விதைகள், உயிர்ப்பரவல் சாகடிப்பு உயர் தொழில்நுட்ப விவசாயம் வறுமையைப் போக்க உதவாது என்று அந்த நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

உலக ஏழைகளுக்கு உணவளிக்க நியாயமான நில விநியோக முறைகள், சிறு விவசாயிகள் நிலத்தில் தாங்களாகவே தங்களது முறைப்படி பயிர் செய்வதற்கான அதிகாரம் இவற்றால் விளையும் நியாயமான உணவு உற்பத்தி இவற்றை மட்டுமே பரிசீலிக்கவேண்டும். என்று மறைமுகமாக அந்த அறிக்கைக் கூறியுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனக் கட்டுப்பாட்டில் உள்ள உயர் தொழில் நுட்ப வேளாண்மை பணக்கார நாடுகளுக்கு உபரி உணவுகளை அளிப்பதோடு நிறுவனங்களின் பெரும் பண லாபங்களை ஈட்டித் தருவது.

மொசாம்பிக் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உணவுப் போராட்டங்களுக்குக் காரணம் கோதுமை விலை வானளாவ உயர்ந்ததே. ஐ.ா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு வரலாற்றிலேயே 3-வது மிகப்பெரிய கோதுமை அறுவடைக்காலம் இது என்று கூறியிருந்தும் சில பல ஆப்பிரிக்க நாடுகளில் உணவுப்பஞ்சம்!

இதற்குக் காரணம் உணவுப்பற்றாக்குறை அல்ல. சர்வதேசச் சந்தைகளில் கோதுமை விலை எந்த அளவுக்கு உயரும் என்ற எதிர்பார்ப்பு, எதிர்கால வர்த்தகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடுபட்டு கோதுமை விலையை உயர்த்தி இருப்பை செயற்கையாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததே.

ஏற்கனவே இந்தியாவில் நாம் பசுமைப் புரட்சியின் பலன்களை அனுபவித்து வருகிறோம், மரபான எண்ணற்ற விதைகள் கொள்ளைபோய் வீரிய விதைகளை விவசாயிகள் மீது திணித்து, வேளாண் உற்பத்தியின் இடுபொருள்களின் கட்டுக்கடங்கா விலைகளையும் அவர்கள் மீது திணித்து, நிலமும், உடலும் பாழாகி, எதற்கும் லாயக்கற்றதாகி இன்று நிற்கிறது நிலமும் அதைச்சார்ந்த வேளாண் மக்களும், ரிச்சாரிய போன்ற விஞ்ஞானிகள் நமது அரசுடனும், ராக்ஃபெல்லர், ஃபோர்ட் பவுண்டேஷன் ஆகிய அறக்கட்டளைகளுடன் போராடிப் போராடி ஓய்ந்தே போனார்!

இந்த நிலையில் ஆப்பிரிக்காவில் பசுமைப் புரட்சிக்கான கூட்டிணைவு (AGRA) என்பதை பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ், ராக்ஃபெல்லர் அறக்கட்டளைகள் உருவாக்கியுள்ளன. அதாவது ஆப்பிரிக்காவுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் வளங்களை அளிக்க என்ற பிரச்சாரத்தில் இது செயல்பட்டு வருகிறது.

இதிலும் பிரதானப் பங்கு வகிப்பது 'நிலச்சாகடிப்பு மான்சாண்டோ' நிறுவனம்தான். இந்தியாவில் BT பருத்தி, கத்திரிக்காய் ஆகியவற்றைக் கொண்டு வ்ந்து கொட்டிய அதே பிரச்சாரம்தான் ஆப்பிரிக்காவிலும் தொடர்கிறது. அதிக மகசூல், பஞ்சத் தடுப்பு, வறுமை ஒழிப்பு ஆகிய பொய்ப் பிரச்சாரங்கள் மீண்டும் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

பழைய பசுமைப் புரட்சியே நாறிக் கொண்டிருக்கும் வேளையில் அதே பொய்ப் பிரச்சாரங்களுடன் புதிய பசுமைப் புரட்சி!!!

இந்தமுறை தூண்டிலை வேறுமாதிரி மாட்டியுள்ளது மான்சாண்டோ, அதாவது ஏழை, சிறு விவசாயிகளுக்கு மரபணு மாற்ற வீரிய விதைகளை இலவசமாக வழங்குகிறதாம்! ஆனால் நடக்கப்போவது என்ன? இலவச விதைகளைப் பயிரிட்டு அந்த நிலங்களை இந்த விதையைச் சார்ந்ததாக்கி, அடுத்த ஆண்டில் அவர்கள் வீரிய விதைகளை மான்சாண்ட்டோவிடமிருந்து பணம் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.

ஏனெனில் இந்தப் புதிய பசுமைப் புரட்சியின் நாயகனான கேட்ஸ் அறக்கட்டளை 2010ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் மட்டும் மான்சாண்ட்டோவிடமிருந்து 23.1 மில்லியன் டாலர்களுக்கு விதைகளை வாங்கி வைத்துள்ளது.

வரும் காலங்களில் ஆப்பிரிக்க விவசாயிகளின் தற்கொலைகள் எண்ணிக்கைகளும் புள்ளிவிவரக் கணக்கெடுப்புகளில் சேர்ந்து விடும். அதைத்தவிர மான்சாண்ட்டோ வேறு எதைச் சாதித்து விட முடியும்?

உலக அளவில் வேளான் தொழிலாளர்களாக இருப்பதில் பெண்களே அதிகம். ஆனால் எந்தவொரு கொள்கை வகுப்பிலும் அவர்களது கருத்திற்கு இடமில்லை. சொல்வதைச் செய் என்ற நிலைதான் வீட்டுக்கு வெளியேயும் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச வாணிபச் சட்டகம், ஐ.எம்.எஃப்., உலக வங்கி ஆகியவை வளரும் நாடுகள் மீது செய்து வரும் கிடுக்கிப்பிடி ஒப்பந்தங்கள், குறிப்பாக ஏற்றுமதிக்கானப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான விதைப் பயிரிடல் என்பதை வலியுறுத்தும் ஒப்பந்தங்கள் ஆகியவைதான் ஏழை நாடுகளின் வறுமைக்கும் உணவின்மைக்கும் காரணம்.

வறுமையில் வாடும் மக்களின் துயரைப்போக்க விவசாயம் இல்லை. ஏதோ நிறுவனங்களின் லாபத்திற்கும், ஏற்றுமதி வர்த்தகத்திற்கும் வசதி செய்து கொடுக்கும் விவசாயம்! இதுதான் இப்போதைய நிலை.

உலகத்திற்குச் சோறுபோடுபவரகள் விவசாயிகள் குறிப்பாக பெண் விவசாயிகள், ராக்பெல்லர், ஃபோர்டு, கேட்ஸ் அறக்கட்டளைகளோ அல்லது மான்சாண்ட்டோ நிறுவனமோ அல்ல.

வளரும் நாடுகளின் மேட்டுக்குடி அரசியல்வாதிகளும், அவர்களின் கொள்கைகளுக்கு எடுபிடியாய்த் திகழும் ஆட்சியதிகார எந்திரங்களும் (படித்தவர்களும், நிபுணர்களும் மிகுந்த எந்திரம்) நம்மை அல்ல... ஏழை மக்களை எதிர்கொள்ளவிருக்கும் அபாயங்கள் பற்றி என்றேனும் யோசிப்பார்களா?

No comments:

Post a Comment