Powered By Blogger

Wednesday, September 22, 2010

எந்திரன் - மீடியாக்களின் மிகை யதார்த்தம்

அக்டோபர் 1ஆம் தேதி எந்திரன் வெளியாகிறது. ர‌ஜினி நடித்தப் படங்கள் வெளியாகும் போது வழக்கத்துக்கு மாறான பரபரப்பும், ஆர்ப்பாட்டமும் இருக்கும். இது அவரது மாஸ் இமே‌ஜ் மற்றும் ரசிகர்களால் ஏற்படுவது.

பாபா வெளிவந்த போதும் மிகப்பெ‌ரிய அளவில் மீடியாக்கள் கொட்டி முழ‌ங்‌கின. பாபா பக்கம் என்று தனிப் பகுதி ஒதுக்கியவர்கள் படம் வெளியான பிறகு ர‌ஜினி ஏமாற்றிவிட்டதாகவும், அரைத்த மாவையே அரைத்திருப்பதாகவும் அங்கலாயத்துக் கொண்டனர். ர‌ஜினி ஒரு நல்ல படத்தை தரவில்லை என்ற ஆதங்கத்தைவிட, நமது ஓவர் பில்டப் வாசகர் முன் சாயம் இழந்துவிட்டதே என்ற கோபம்தான் அவர்களை விமர்சனத்தில், அரைத்த மாவு என்று நெ‌ளிய வைத்தது.

WD
எந்திரன் வெளிவரும் இந்த காலகட்டத்தில் விளம்பரம், வர்த்தகம் என அனைத்துமே மாற்றமடைந்துவிட்டது. ஸ்டார் வேல்யூ இல்லாத நடிகர்களின் கதையில்லா படங்களையும் விளம்பரம் மூலம் ஓட வைக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள். தொலைக்காட்சியும், அச்சு ஊடகமும் கையிலிருந்தால் எதையும் விற்றுவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தொலைக்காட்சியின் ஆபத்து குறித்துப் பேசும் சமூகவியலாளர் பியர் பூர்தியூ முக்கியமான ஒரு விஷயத்தை தெ‌ளிவுப்படுத்துகிறார். தொலைக்காட்சி என்பது யதார்த்தத்தை காண்பிப்பது என்பதைத் தாண்டி யதார்த்தத்தை போலியாக உருவாக்குவதாக குற்றம்சாற்றுகிறார்.

உதாரணமாக, குஷ்பு கற்பு குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெ‌ரிவித்து நடந்த போராட்டத்தில் பதினைந்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஒரு தெருவைக்கூட சலசலப்புக்கு உள்ளாக்காத இந்த போராட்டத்தை குறிப்பிட்ட தொலைக்காட்சி ஒன்று மறுபடியும் மறுபடியும் ஒளிபரப்பியது, தனது அச்சு ஊடகத்தில் தலைப்புச் செய்தியாக்கியது. தமிழ்நாட்டில் அன்றைய தேதியில் அதுதான் மிகப் பெ‌ரிய பிரச்சனையாக ஊதி பெ‌ரிதாக்கப்பட்டது.

குறிப்பிட்ட அந்த தொலைக்காட்சி இந்த செய்திக்கு அளவுக்கு மீறிய அழுத்தத்தை கொடுக்காமல் இருந்திருந்தால் தமிழர்களின் கவனத்தில் அது பதியாமலே போயிருக்கும், நமக்கு ஒரு ‘திடீர்’ அரசியல்வாதியும் கிடைத்திருக்க மாட்டார்.

எந்தப் பிரச்சனையை எடுத்துக் கொள்வது, எதை ஊதிப் பெ‌ரிதாக்குவது என்பது மட்டுமின்றி எதை பிரச்சனைக்குள்ளாக்குவது என்பதுவரை தொலைக்காட்சிகளை நிர்வகிக்கும் தனி மனிதர்களால்தான் முடிவு செய்யப்படுகிறது. இன்னும் ச‌ரியாகச் சொன்னால் நாம் எதை பார்க்க வேண்டும், எதை பார்க்கக் கூடாது என்பதையே இந்த தனி மனிதர்கள்தான் முடிவு செய்கிறார்கள். இதைதான் பியர் பூர்தியூ தொலைக்காட்சியின் அபாயம் என்று குறிப்பிட்டார்.

24
மணி நேர செய்தி சேனல்கள் பெருகிய பிறகு செய்திகளின் தேவை அதிகமாகிவிட்டது. செய்தி சேனல்கள் அகோரப் பசியுடன் பிரேக்கிங் நியூஸுக்காக அலைகின்றன. அவைகளின் பசியின் பெரும் பகுதியை தீர்த்து வைப்பவர்கள் செலிபி‌ரிட்டிகள் எனப்படும் பிரபலமானவர்கள். ஐஸ்வர்யாராய் சேலை கட்டினால் அதை நாள் முழுவதும் காண்பிக்க செய்திச் சேனல்கள் கூச்சப்படுவதில்லை. இதனால் நாம் எதிர்பார்க்காத திசையிலிருந்தெல்லாம் செலிபி‌ரிட்டிகள் முளைத்து வருகிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆகப்பெ‌ரிய செலிபி‌ரிட்டி ர‌ஜினிகாந்த். இந்த செலிபி‌ரிட்டி எல்லோரையும்விட அதிகமாக ரசிகர்களுக்கு தேவைப்படுகிறார். தான் யாருக்கு ரசிகராக இருக்கிறோமோ அவர்தான் உலகின் ஆகச் சிறந்த பிரபலமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு ரசிகனுமே விரும்புகிறான்.

இந்த செலிபி‌ரிட்டி ஷங்கருக்கு மிகவும் தேவைப்படுகிறார். எந்திரன் போன்ற காஸ்ட்லியான கனவை நனவாக்க கடைநிலை செலிபி‌ரிட்டியாலோ, இடைநிலை செலிபி‌ரிட்டியாலோ முடியாது.

இந்த செலிபி‌ரிட்டி சன் பிக்சர்ஸ் போன்ற நிறுவனத்துக்கு மிக மிகத் தேவை. 150 கோடியை முதலீடு செய்து அதைவிட பல மடங்கை அறுவடை செய்ய நாக்க முக்க செலிபி‌ரிட்டிகளால் முடியவே முடியாது. ர‌ஜினி போன்ற மெகா செலிபி‌ரிட்டிதான் வேண்டும்.

WD
இன்று தமிழக மக்கள் அனைவரும் எந்திரன் எனும் தேவதூதனை எதிர்நோக்கி நோன்பு இருப்பதான சித்திரத்தை தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் ஏற்படுத்தி வருகின்றன. இந்த மிகை யதார்த்தத்திற்குள்தான் இன்று தமிழகம் மிதந்து கொண்டிருக்கிறது. எந்திரனை முதல் நாள் முதல் ஷேபார்ப்பதே ஒரு மனிதனின் ஆகப்பெ‌ரிய கடமை போலவும், அதுவே மாபெரும் கௌரவம் போலவும் தினம் மந்தி‌ரித்துக் கொண்டிருக்கின்றன ஊடகங்கள். இந்த மந்திரத்துக்கு கட்டுப்பட்டு முதல் நாள் ஐந்தாயிரம் பத்தாயிரம் பணம் கொடுத்து படம் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் நூற்றைம்பது கோடியை முதலீடு செய்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையினால்தான் திரையரங்கு உ‌ரிமையாளர்கள் பல கோடி ரூபாய்க்கு எந்திரன் பெட்டியை வாங்கியிருக்கிறார்கள்.

எந்திரன் மீது வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் இந்த விளம்பர வெளிச்சம் தமிழகத்தின் கண்களை கூசச் செய்கிறது. பியர் பூர்தியூவின் வார்த்தைகளில் சொன்னால், மீடியாக்களின் அதிகாரத்தால் உருவாக்கப்பட்டிருக்கும், எந்திரனே எல்லாம் என்ற மிகை யதார்த்த உலகில்தான் இன்று தமிழகம் இருக்கிறது.

முதல் நாளே எந்திரனை பார்க்கும் வேட்கையில் பல்லாயிரம் ரூபாயை காவு கொடுக்க நாம் தயாரானால், நம்மை அறியாமலே நாம் மீடியாவின் மிகை யதார்த்த வலையில் சிக்கிக் கொண்டோம் என்று அர்த்தம்.

ஐநூறும், ஐந்தாயிரமும் கொடுத்து விட்டில் பூச்சி ஆகப்போகிறோமா? இல்லை, இரண்டு வாரங்கள் பொறுத்திருந்து திரையரங்கு கட்டணத்தை மட்டுமே செலுத்தி நமது சுய கௌரவத்தை மீட்டெடுக்கப் போகிறோமா?

முடிவு தனி மனிதர்களின் கையில்தான் இருக்கிறது. நன்றி யாஹூ

No comments:

Post a Comment