Powered By Blogger

Friday, October 29, 2010

வம்சம்



கருணாநிதி "வம்சம்"

வம்சம், கனிமொழி, அஞ்சுகம், இதெல்லாம் கோடம்பாக்கத்தில் எடுக்கப்பட்ட எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாக்களின் பெயர்கள். இனி வரும் காலங்களில் தயாநிதி, கலாநிதி, தயாளு, ராஜாத்தி, காந்தி அழகிரி, துர்கா ஸ்டாலின், இதெல்லாம் தமிழ் சினிமாவில் வரப்போகிற படங்கள். இதற்கு கூட்டம் கூட்டி ஆள் பிடிக்க வேண்டிய அவசியமே இல்லை.

கருணாநிதியின் வாரிசுகள், வாரிசின் வாரிசுகள் என்று நிறுத்தமில்லாமல் வளர்ந்து விட்ட நிலையில் எல்லா தொழில்களையும் கபளீகரம் செய்து கொண்டிருக்கும் கருணாநிதி குடும்பம் சினிமாவையும் விட்டு வைக்கவில்லை. பிரமாண்ட மல்டிபிள் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், நவீனக் குடியிருப்புகள், சாராய ஆலைகள், ரியல் எஸ்டேட், எந்த வழியேலேனும் சம்பாதித்து தமிழகத்தையே பழைய ராஜராஜசோழன் காலத்திற்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறார் கருணாநிதி. ஆக அரசியலிலும், தொழிலிகளிலும் முத்துவேலர் வம்சம் கொடி கட்டிப்பறக்கிறது.

எண்பதுகளில் இந்தியாவையே கபளீகரம் செய்த நேரு குடும்பத்தினரின் ஆதிக்கத்தை எதிர்த்தவர் கருணாநிதி. இந்தியா என்ன நேரு குடும்பத்தின் சொத்தா? என்றெல்லாம் கேட்டவரின் குடும்பம் நேரு குடும்பத்தையே விஞ்சி விட்டது. மகள்,மகன்,பேரன்,பேத்தி கொள்ளுப் பேரன் என்று கிளம்பி வந்து தமிழகத்தையே சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மெகா குடும்பத்தை அண்டிப் பிழைக்கும் குறு நில மன்னர்களோ அவர்கள் சக்திக்கு வட்டம், மாவட்டம், வட்டாரம் என்று பங்கு போட்டு வாரிச் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள். வட போச்சே என்பது போல சசிகலா குடும்பமோ அடுத்து எப்படி ஆட்சிக்கு வருவது இந்தத் தொழில்களை எப்படிக் கைப்பற்றுவது என்று கைபிசைந்து நிற்கிறது.

தமிழின் சினிமாவில் ஒரு காலத்தில் சிறு சிறு தயாரிப்பாளர்கள் கூட சினிமாத் தொழிலில் முதலிட முடியும் என்ற நிலை மாறி சன் தொலைக்காட்சி கேட்கிற விலைக்குள் படத்தை எடுத்து முடித்து அதற்குள் லாபம் பார்க்கிற ஒருவரால் மட்டுமே சினிமாவில் இருக்க முடியும் என்ற நிலை. இதை மீறுகிறவர்களோ, சன், கலைஞர் தொலைக்காட்சிகளுக்கு அப்பாற்பட்டு ரசிகர்களை நம்பி படம் எடுக்கலாம் என்று நினைக்கிறவர்களோ அதிகாரமற்றவர்களாக இருந்தால் கோடம்பாக்கத்தில் எதுவுமே செய்ய முடியாத நிலை. அல்லது எல்லோரும் மணிரத்னமாகப் பிறந்திருக்க வேண்டும். ஒரு மாறன் இல்லை என்றால் சோனி நிறுவனத்திடம் பேரம் பேசி விற்கும் தந்திரம் தெரிந்திருக்க வேண்டும். ஆக விருத்தியான பார்ப்பன, திராவிட வம்சங்களில் பிறக்க வாய்ப்பில்லாதவர்கள் கருணாநிதியின் வம்சத்தின் முன் அடங்கி நடக்க வேண்டும். இதுதான் மாமன்னர் கருணாநிதியின் அரசியல் வளர்ச்சி.

இவர்கள் முதன் முதலாக கைப்பற்றியது கேபிள் தொலைக்காட்சியை. திமுகவின் கட்சிப் பணத்தை எடுத்து பேரன்களுக்குக் கொடுத்து பூமாலை என்னும் வீடியோ பத்திரிகையைத் துவங்கினார் மாமன்னர். பின்னர்தான் அதிகாரமும் வந்து சேர பூமாலை தன் வலையை விரித்து கேபிள் தொடங்கி இப்போது தென்னிந்தியாவையே 17 சேனல்களால் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் தூர்தர்ஷன் தமிழர்களுக்கு எதிரானது என்று சொல்லி தூர்தர்ஷனை உடைத்த கருணாநிதியின் குடும்ப ஊடகங்கள் தூர்தர்ஷனை விட படுமோசமான நஞ்சு போதையை மக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கின்றன.

இவர்களை மீறி எந்த ஒரு தொலைக்காட்சியும் கேபிள் வழி மக்களைச் சென்றடைய முடியாத நிலை. இவர்களை விமர்சித்து ஏதாவது நிகழ்ச்சி தயாரித்தால் அந்த நிகழ்ச்சி மக்களைச் சென்றடையாது. காரணம் 70% கேபிள் இணைப்புகளை கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சுமங்கலி கேபிள் விஷன் வைத்திருக்கிறது. மீதியை அழகிரிக்குச் சொந்தமான நிறுவனம் வைத்திருக்கிறது. இது கேபிள் தொலைக்காட்சியின் நிலை. வம்சங்களுக்கிடையில் பிளவு வந்த போது அரசுத் தொலைக்காட்சி துவங்கி உமசாங்கரை பொறுப்பாகப் போட்டு பின்னர் வம்சம் இணைந்ததும் அவரை பலிகடாவாக்கியதுதான் வம்சத்தின் இயல்பான குணம். வம்சம் பிரிந்த போது ஒரு தொலைக்காட்சிதான் இருந்தது வம்சம் இணைந்த பின் செத்தும் கெடுத்தான் சீதக்காதி என்பது போல சன், கலைஞர் என்று இரண்டு சனியன்கள்.

சினிமாவை மட்டும் ஏன் விட்டு வைக்க வேண்டும் என்று நினைத்த மாறன் சகோதரர்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தைத் துவங்க ஸ்டாலினின் மகனோ ரெட் ஜெய்ண்ட் நிறுவனத்தைத் துவங்கினார். அழகிரி மகனோ கிளவுட் நைன் நிறுனத்தை துவங்கினார். இன்று கோடம்பாக்கத்தில் இந்த மூன்று சினிமா நிறுவனங்களுக்கும் வைப்பதுதான் சட்டம். மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர்களுக்கு பத்து கோடி சம்பளம் ஏற்றி விட்டதோடு, எந்தப் படத்திற்கு தியேட்டர் கொடுப்பது, எந்தப் படத்தை எப்போது வெளியிடுவது, தொலைக்காட்சி ரைட்ஸ் எவளவு என தீர்மானிப்பது எல்லாம் இவர்கள்தான்.

இந்த வம்சத்தின் அரஜாகத்திற்கு துணைப்போகும் சூப்பர் ஸ்டார்கள், சுப்ரீம் ஸ்டார்கள். புரட்சி நாயகர்கள். படங்களில் இந்த புர்ரச்சி வீரர்கள் காண்பிக்கும் வீரம் நிஜத்தில் கோபாலபுரத்தில் கொத்தடிமைகளாக நடமாடுகின்றன. கருணாநிதி வம்சம் எடுக்கிற சினிமாவைத்தான் விநியோகஸ்தகர்கள் வாங்க வேண்டும், தியேட்டர்காரர்கள் திரையிட வேண்டும், ரசிகர்கள் பார்க்க வேண்டும். இது போக எடுக்கப்படுகிற எல்லா சினிமாக்களையும் தங்கள் தொலைக்காட்சிகளுக்கே கேட்கிற விலைக்கே விற்க வேண்டும் என்ற மறைமுக நெருக்கடி வேறு. ஆக கருணாநிதி வம்சத்தின் அந்தப்புரமாக கோடம்பாக்கம் மாறி விட்டது.

அடுத்து பத்திரிகை. தமிழ் பத்திரிகை உலகில் கிட்டத்தட்ட எல்லா பத்திரிகைகளையுமே கட்டுப்படுத்துவது, அல்லது பத்திரிகை துவங்குவது என்று துவங்கி இப்போது இருக்கும் எல்லா ஊடகங்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது கருணாநிதி வம்சம். குமுதல் செட்டியாருக்கும் வரதராஜனுக்கும் வந்த பிரச்சனையில் உள்ளே நுழைந்த கருணாநிதி இரு தரப்பையுமே தன் வழிக்குக் கொண்டு வந்து விட்டார். செட்டியார் இனி எப்போதும் கருணாநிதிக்கு எதிராக எழுத முடியாது. வரதராஜனின் குமுதம் ரிப்போர்ட்டரோ எழுதிய அடுத்த நிமிடமே பழைய எப்..ஆர் தூசு தட்டி எடுக்கப்படும் நிலையில் நிரந்தரமான கத்தியை செட்டியாருக்கும், பார்ப்பனருக்கும் சேர்த்தே தொங்கவிட்டு விட்டார் கருணாநிதி.

மிச்சமிருப்பது ரியல் எஸ்டேட். கருணாநிதியின் மூத்த மகன் மு. முத்து குடிகாரராக இருந்த இவர் நீண்டகாலமாக கருணாவைத் திட்டிக் கொண்டிருந்தார். அதிமுக கூட கருணாநிக்கு எதிராக இவரைப் பயன்படுத்திக் கொண்டது. இப்போது ஐந்தாவது முறையாக முதல்வரான கருணாநிதி பதவியேற்ற உடனேயே முத்துவை சேர்த்துக் கொண்டார். இப்போது ரியல் எஸ்டேட் தொழிலில் முத்துவின் மகன் டாக்டர் அறிவுநிதி கொடி கட்டிப் பறக்கிறார். இன்றைய தேதியில் தமிழக விவாசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு நிலத்தை மிரட்டி வாங்கி பிரமாண்ட குடியிருப்புகளை அமைப்பதும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு விவாசாய நிலங்களை மக்களை மிரட்டி வாங்கிக் கொடுப்பதும்தான் அறிவுநிதியின் தொழில். ஒரே நாளில் பல கோடி ரூபாய், இப்படிக் கட்டப்பஞ்சாயத்து செய்து சம்பாதிக்கும் அறிவு நிதி சினிமாவிலும் அவ்வப்போது போலீஸ் மாமா கேரக்டரில் நடித்து சமூக நீதியை நிலைநாட்டுகிறார்.

முத்துவேலர் வம்சம் தழைத்தோங்கி செழித்தோங்கி ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஆக்டோபஸ் போலப் படர்ந்திருக்கிறது. ஆனால் கருணாநிதி முன்னர் எப்போதையும் விட தனது வாரிசுகளை நினைத்து பெருமை கொள்கிற ஒரு தகப்பனாக வம்சத்தின் அரசனாக இருக்கிறார். இது தொடர்பான அதிருப்தி எல்லா தரப்பிலும் எழுவதை உணர்ந்திருக்கும் கருணாநிதி அதை அலட்சியத்துடன் ஒதுக்குகிறார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த நடிகர், நடிகைகள், தொழிலாலளர்களுக்கு நிலம் வழங்கி வீடு கட்டும் திட்டத்தை துவங்கும் விழாவில் கலந்து கொண்டு தன் பெயரை தானே அந்த சினிமா ஏழை நடிகர்களின் நகருக்கு வைத்து அதை தானே திறந்து வைத்துப் பேசிய கருணாநிதி இந்தியாவில் உள்ள எல்லா வாரிசுகளையும் சுட்டிக்காட்டி இப்படி எல்லோரும் வாரிசாக இருக்கும் போது ‘‘என் மனைவி மட்டும் மலடியாக இருக்க வேண்டுமா? ’’ என்று கேட்டிருக்கிறார். மேலும் நான் திராவிட மக்களுக்காக உழைப்பதாலேயே இப்படித் திட்டப்படுவதாக வேறு தன் வழக்கமான திராவிட, பார்ப்பனப் பல்லவியைப் பாடியிருக்கிறார். நிகழ்ச்சி முடிந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கலாசார தூதுவரும் பார்ப்பன நாட்டிய மாமேதை பத்மா சுப்ரமணியத்தின் ராஜராஜசோழன் ஆயிரமாண்டு ஸ்பெஷல் மானாட மயிலாட டான்ஸ் ரிகல்சலுக்குச் சென்றதாகக் கேள்வி.

புழுத்து நாறிக் கொண்டிருக்கும் இந்த சமூக அமைப்பில் சினிமா தொடங்கி சட்டமன்றம், நாடாளுமன்றம் வரை வாரிசுகளின் ராஜ்ஜியமே கொடிகட்டிப் பறக்கிறது. இந்த வாரிசுகள் தங்களின் திறமைகளால் வந்தவர்களில்லை. அரசு, சினிமாத்துறைகளின் பிரமாண்டமான இரும்புக் கதவுகள் இவர்களின் தனிப்பட்ட திறமைகளுக்காகவும் திறக்கவும் இல்லை. ரவுடி அழகிரி மத்திய மந்திரியானதும், அழகிரி மகன் தயாரிப்பாளராகவும், ஸ்டாலின் மகன் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளராகவும், தயாநிதி எம்.பி, அமைச்சரானதும், இலக்கியவாதி கனிமொழி ஓவர்நைட்டில் பாராளுமன்ற உறுப்பினராக ஆனதும் வம்சத்தின் அதிகார செல்வாக்கில்தான். இந்த வம்சத்தின் ஆட்சியை ஏற்றுக் கொண்டதால்தால் ரஜினி வம்சம், கமல் வம்சம், போன்ற சினிமா வம்சங்கள் வாழ்கின்றன.

இப்போது வம்சம் தனது சாம்ராஜ்ஜியத்தை அதிகாரப்பூர்வமாகவும், வியாபார நிமித்த்தமாகவும் நிலைநாட்டிவிட்டது. அரசியலோ, சினிமாவோ, பத்திரிகையோ எல்லாம் வம்சத்தின் தயவில் வாழ்கின்றன. வம்சத்தை எதிர்த்துக் கொண்டு ஒரு தமிழன் கூட தமிழகத்த்தில் மூச்சு கூட விடமுடியாது. தமிழ், திராவிடம், முற்போக்கு, முதலாளித்துவம் எல்லாம் வம்சத்தின் இருப்பிற்கேற்ப புதிய விளக்கம் பெறுகின்றன.

சட்டபூர்வமாகவோ, சட்டமன்ற தேர்தல் மூலமாகவோ இந்த வம்சத்தை வீழ்த்திட முடியாது. சுரணையும், சுயமரியாதையும், வார்த்தையைத் தாண்டி வாழ்க்கையில் வரும்போது தமிழக மக்க்ளால் வம்சத்தின் ஆட்சிக்கு முடிவு கட்ட முடியும். அந்த நாள் தானாக வருமென்று காத்திருப்பவர்கள் முடக்கப்படுவார்கள். அந்த நாளை தனது போராட்ட இலக்காக கொண்டு போராடுபவர்கள் அதிகரிக்கும்போது வம்சம் அதன் அடிப்படையற்ற டாம்பீகத்திலிருந்து வேரும் விழுதுமாய் நீக்கப்படும

Tuesday, October 26, 2010

உண்மையான கதாநாயகன்

அன்பு நண்பர்களே !

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

http://itsmeena.files.wordpress.com/2010/10/krishnan_quote.jpg?w=614&h=268

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, இந்தியனாக மிகவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?
அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய்நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்

http://www.akshayatrust.org/contact.php

Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்

http://heroes.cnn.com/vote.aspx

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன் .

மறு பதிப்பு,

பரணி


--